உக்கடம் பெரியகுளம், ராஜவாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 638 வீடுகள் இடிப்பு


உக்கடம் பெரியகுளம், ராஜவாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 638 வீடுகள் இடிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2017 1:00 PM IST (Updated: 13 Sept 2017 11:53 AM IST)
t-max-icont-min-icon

கோவை உக்கடம் பெரியகுளம், ராஜவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 638 வீடுகள் இடிக்கப்பட்டன.

கோவை,

கோவை உக்கடம் பெரியகுளம், ராஜவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 638 வீடுகள் இடிக்கப்பட்டன. இதன் முலம் தண்ணீர் வரத்து கால்வாய்கள் திறக்கப்பட்டதால் குளங்கள் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கோவை சூளைமேடு, நஞ்சுண்டாபுரம், சுண்ணாம்பு காளவாய், ராஜவாய்க்கால், முத்துகாலனி, அண்ணா காலனி, சேரன் நகர், ஆசாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிக்கும் பொதுமக்களுக்காக அரசு வெள்ளலூர் பகுதியில் தனியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்தது.

இதற்காக ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூரில் சுமார் 2 ஆயிரத்து 800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

பயனாளிகள் தங்களது வீடுகளை காலி செய்ததை தொடர்ந்து நேற்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். இதில் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய பொதுமக்களுக்கு மாற்றிடமாக வெள்ளலூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இங்கு 2 ஆயிரத்து 800 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 1 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இந்த வீடுகளுக்கு பயனாளிகள் குடிபுகுந்ததை தொடர்ந்து அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக கோவை அணைமேடு பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 377 வீடுகளும், உக்கடம் பெரிய குளம் பகுதியில் உள்ள அண்ணா காலனியில் 66 வீடுகள், முத்துகாலனியில் 75 வீடுகள், சேரன் நகரில் 75 வீடுகள், ஆசாத் நகரில் 45 வீடுகள் உள்பட மொத்தம் 638 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.

இந்த இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த இடங்களில் தேவைப்பட்டால் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைவில் மேற்கொள்வார்கள்.

2-ம் கட்டமாக நஞ்சுண்டாபுரம் விட்டேரி, ராஜவாய்க்கால், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 700 வீடுகள் இடிக்கப்படும். இங்கு வசித்து வந்த பொதுமக்களும் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராஜ வாய்க்கால் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதால் கடந்த பல ஆண்டுகளாக வெள்ளலூர், குறிச்சி குளங்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மேற்கண்ட குளங்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆண்டுகள் பல கடந்து விட்டன. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து தண்ணீர் வரத்து கால்வாய்கள் திறக்கப்பட்டதால் தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story