அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டனர்

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
ராமநாதபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டனர். இவர்கள் அந்த பகுதியில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நைனாமுகம்மது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோர்ட்டு உத்தரவு தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும், மாநில மைய முடிவின்படி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவு பகலாக தங்கியிருந்து காத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வரும் இந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.