நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாகர்கோவிலில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாகர்கோவிலில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 5:27 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாகர்கோவிலில் பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பிறகு எதிர்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின் (தி.மு.க.), பிரின்ஸ் (காங்கிரஸ்), தி.மு.க. முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நிர்வாகிகள் ஜோசப்ராஜ், சிவராஜ், வக்கீல் மகேஷ், தில்லை செல்வம், பெர்னார்டு, ஷேக்தாவுது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவகர்சாதிக், தி.க.வை சேர்ந்த வெற்றிவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்று பேசினர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்கு மத்திய மாநில அரசுகள் அநீதி செய்து விட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட கூடாது. இந்தியாவிலேயே தமிழக டாக்டர்கள் தான் சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவர்கள். மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். இவ்வாறு சிறப்பான சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நீட் தேர்வு எழுதியா டாக்டர் ஆனார்கள்? நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் காலில் தமிழக அரசு விழுந்து கிடக்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய எச்சரிக்கை விடுக்கும் வகையில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்றார். முடிவில் முன்னாள் எம்.பி. அப்பாத்துரை நன்றி கூறினார்.


Next Story