மூடுபனியில் மூழ்கியது திம்பம் மலைப்பகுதி ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
திம்பம் மலைப்பகுதியில் நேற்று காலை கடும் மூடுபனி ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
பவானிசாகர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரம் கொண்டதாகும். பண்ணாரியில் இருந்து 27 கொண்டை ஊசிகளை கொண்ட திம்பம் மலைப்பாதையின் இரு பக்கத்திலும் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டதாகும். தற்போது பெய்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையின் இரு பக்கத்திலும் உள்ள வனப்பகுதி பசுமையாக மாறி குளிர்ந்து காணப்படுகிறது. திம்பம் மலைப்பகுதியில் எப்போதும் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் இதை குட்டி கொடைக்கானல் என்று அழைப்பதும் வழக்கம்.
நேற்று காலை 6 மணி முதல் பகல் 10.30 மணிவரை திம்பம் மலைப்பாதையில் கடும் மூடுபனி நிலவியது. 10–வது கொண்டை ஊசிக்கு மேல் குளிர்ச்சி அதிகமாக இருந்தது. 22–வது கொண்டை ஊசியில் இருந்து திம்பம் மற்றும் கொள்ளேகால் பிரிவு வரை கடும் மூடுபனி ஏற்பட்டது. இதனால் 10 அடிக்கு முன்னால் இருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஆமை வேகத்தில் ஓட்டி வந்தனர். சுற்றுலா பயணிகள் இந்த மூடுபனியை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது வனப்பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ வனத்துறை தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனத்தில் இருந்தபடியே மூடுபனி பகுதியில் ‘செல்பி‘ எடுத்துக்கொண்டனர்.