பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு மீண்டும் சலுகையா?


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு மீண்டும் சலுகையா?
x
தினத்தந்தி 14 Sept 2017 5:15 AM IST (Updated: 14 Sept 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு மீண்டும் சலுகை வழங்கப்பட்டதா? என்பதற்கு போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக அவர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த வசதிகளை சசிகலாவுக்கு செய்து கொடுத்ததாக ரூபா கூறியிருந்தார். அவ்வாறு எந்த சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசின் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

6 பேர் சந்தித்தனர்

இந்த நிலையில் புதிதாக போலீஸ் மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள ராமலிங்கரெட்டி நேற்று முன்தினம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கைதிகளின் குறைகளை கேட்டு அறிந்தார். சசிகலாவிடமும் அவர் நலம் விசாரித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது சிறை விதிமுறைகளின்படி ஒரு தண்டனை கைதியை அவருடைய நெருங்கிய உறவினர்கள் 4 பேர் முதல் 6 பேர் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க முடியும். கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி சசிகலாவை உறவினர்கள் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன், பழனிவேலு, ராமலிங்கம், தமிழ்மகன்உசேன், வெற்றிவேல் ஆகிய 6 பேர் சந்தித்தனர்.

விதிமீறல்

அதே மாதம் 11-ந் தேதி இளவரசியை 7 பேர் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதாவது அவரை ஷகிலா, விவேக், கீர்த்தனா, ஜெயா, வெற்றிவேல், நாகராஜன் உள்பட 7 பேர் சந்தித்து பேசி உள்ளனர். இதில் 4 பேர் உறவினர்கள் ஆவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

எனவே, இளவரசியை சந்திக்க வந்தவர்கள், சசிகலாவையும் சிறை விதிமுறைகளை மீறி சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போலீஸ் மந்திரி மறுப்பு

இந்த நிலையில் சசிகலாவுக்கு பரப்பனஅக்ரஹாரா சிறையில் மீண்டும் சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை என்று மறுத்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு மீண்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நான் அந்த சிறைக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை நானே நேரில் பார்த்தேன்.

சிறையில் சசிகலாவும், இளவரசியும் மற்ற கைதிகளை போலவே நடத்தப்படுகிறார்கள். சிறையில் சசிகலாவுக்கு ஏதாவது வேலை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் நான் விசாரிக்கவில்லை. ஆனால் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தால் அவருக்கும் உரிய வேலை வழங்கப்படும்.

இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார். 

Next Story