‘மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்’ தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்று சிதம்பரத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிறுவன தலைவர் வேல்முருகன் பேசினார்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தில்லைநாயகம் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
கூட்டத்தில் அவர் பேசுகையில், நமது கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதுவரையில் நாம் 500–க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். யார் பாதிக்கப்பட்டாலும், போராட்டம் நடத்தும் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி தான். விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. மண்ணுக்காவும், மக்களுக்காகவும் நமது கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும்.
‘நீட்’ தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டது, தமிழக மக்களை பெரும் சோகத்தில் மூழ்க செய்து இருக்கிறது. இனியும் ‘நீட்’ தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். பணம் இல்லாத மாணவ, மாணவிகள் யாரும் இனி டாக்டராக முடியாது.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகரித்து விட்டது. மக்களை பற்றி தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். வறட்சியால் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனால் அதை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. தங்களது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார்கள். இது வெட்கமாக உள்ளது.
கட்சி நிர்வாகிகள் அனைவரும், நல்ல அரசியலை செய்யுங்கள், பிரச்சினைகள் இல்லாத இடங்களில் கட்சி கொடியேற்றுங்கள். கிராமங்கள் தோறும் புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும். போலீசில் உரிய அனுமதியை பெற்று நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். வரும் பருவமழை காலத்தில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் தமிழ், கோபு, கரிகாலன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளம்புயல் பாசறை தலைவர் குமரன் நன்றி கூறினார்.