மினி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 கொத்தனார்கள் பலி


மினி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 கொத்தனார்கள் பலி
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே மினி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 கொத்தனார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஆம்பூர் அருகே உள்ள மஞ்சப்புளி காலனியை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகன் மணிகண்டன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அருண்குமார்(20). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

நேற்று இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அம்பையில் இருந்து, விக்கிரமசிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அகஸ்தியர்பட்டி அருகே மெயின் ரோட்டில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் ஒரு மினி பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், மினி பஸ்சும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் பலியான அருண்குமார், ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க இருந்தார். இதற்காக விக்கிரமசிங்கபுரத்தில், தான் படித்த பள்ளியில் சான்றிதழ் பெறுவதற்கு மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி இருவரும் பலியானது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

Related Tags :
Next Story