வடலாவில், ஆனந்த சதுர்த்தி தினத்தன்று பெண் போலீஸ் அதிகாரியை மானபங்கம் செய்தவர் சிக்கினார்
வடலாவில், ஆனந்த சதுர்த்தி தினத்தன்று பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மானபங்கம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை வடலா போலீஸ் நிலையத்தை சேர்ந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆனந்த சதுர்த்தி தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு மானபங்கம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரின் கையை தட்டிவிட்டு, அவரை பிடிக்க முயன்றார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தநிலையில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் சத்தம்கேட்டு மற்ற போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
வாலிபர் கைது
ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடலா டி.டி. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மானபங்கம் செய்த வாலிபரை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மானபங்கம் செய்தது சயான் சஞ்சய் காந்திநகர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story