சரத்பவார் உடனான தனிப்பட்ட சந்திப்பு சஞ்சய் ராவுத் எம்.பி. பேட்டி
“சரத்பவார் உடனான தனிப்பட்ட சந்திப்பை நான் பகிரங்கமாக வெளியிட்டிருக்க கூடாது” என்று சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மும்பை,
பிரதமர் மோடியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சந்தித்து பேசியபோது, சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு கேபினட் அந்தஸ்திலான மத்திய மந்திரி பதவி அளிக்க மோடி முன்வந்ததாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை சிவசேனா எம்.பி.யும், சாம்னா ஆசிரியருமான சஞ்சய் ராவுத் எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த தகவலை பாரதீய ஜனதாவும், தேசியவாத காங்கிரசும் திட்டவட்டமாக மறுத்தன. பரபரப்பான இந்த சூழலில், சஞ்சய் ராவுத் எம்.பி. நேற்று மராத்தி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த தலையங்கத்தை மேற்கோள்காட்டி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
கருத்தியல் எதிரிகள்
எனக்கும், சரத்பவாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நான் ‘சாம்னா’வில் வெளியிட்டேன். அது ஒரு தனிப்பட்ட உரையாடல் என்பதால், அதனை நான் பகிரங்கமாக வெளியிட்டிருக்க கூடாது. இந்திய அரசியலை பொறுத்தமட்டில், யாரும், யாருக்கும் எதிரி அல்ல. நாங்கள் கருத்தியல் எதிரிகள். ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்போம்.
மோடி சுப்ரியா சுலேக்கு அழைப்பு விடுத்திருந்தால், அங்கு அரசியல் ‘கிச்சடி’ சமைக்கப்படுவதாக அர்த்தம் அல்ல. அந்த உரையாடலில் மோடியின் பெயரும் இடம்பெற்றதால், அந்த தலையங்கத்தை வெளியிட்டதில் சரத்பவாருக்கு உடன்பாடு இல்லை என்று நான் கருதுகிறேன்.
தவறான புரிதல்
எனக்கும், சரத்பவாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் நகைச்சுவை கலந்ததாகவோ அல்லது குடும்ப பாங்கானதாகவோ இருந்திருக்கலாம். அவர் இந்த தொனியில் என்னிடம் பேசியிருக்கலாம். எங்கேயோ தவறான புரிதல் நிகழ்ந்துவிட்டது.
இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.
Related Tags :
Next Story