கடப்பாக்கம் குப்பத்தில் 2 பேர் கொலை இயல்பு நிலை திரும்பாததால் பொதுமக்கள் அவதி
கடப்பாக்கம் குப்பம், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பம் கிராம மக்கள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கடப்பாக்கம் குப்பம், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பம் கிராம மக்கள் இரு தரப்பினர் இடையே கடந்த 1–ந் தேதி ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த சேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் வீடுகள், படகுகள், மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் சூனாம்பேடு போலீசார் 34 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பொதுமக்கள் அவதி
இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஆலம்பர ஊத்துக்காட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த பிறகு அந்த பகுதியை சேர்ந்த 40 மாணவ– மாணவிகள் கடந்த 15 நாட்களாக அங்குள்ள பள்ளிக்கு செல்லவில்லை. அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையும் 15 நாட்களாக திறக்கப்பட வில்லை.
அந்த பகுதி மக்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினரும் போலீசாரும் இரு தரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story