தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 2:45 AM IST (Updated: 15 Sept 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு பணிகள் முன்னேற்றம், பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்த சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் தலைமை தாங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது, பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சிதுறை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய உள்ளாட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் துறை சார்ந்த அலுவலர்கள் நீர் நிலைகளில் இருந்து நீரேற்றும் மையங்களுக்கு செல்லும் குடிநீரை தேவையான அளவு குளோரினேசன் செய்து சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் தடுப்புக்கான போதிய மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். போதுமான அளவு குளோரின் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் பிளச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகளில் “ஏ.டி.எஸ்.“ கொசு புழுக்கள் உற்பத்தி இல்லை என உறுதி படுத்தும் வகையில், வியாழக்கிழமை தோறும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அளிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான், விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும். மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி முற்றிலுமாக காய்ச்சல் ஏற்படாதவாறு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரப்பணி துணை இயக்குனர்கள் டாக்டர் கீதாராணி, டாக்டர் போஸ்கோராஜா, நகர் நல மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story