பெங்களூருவில் சம்பவம் பள்ளி கழிவறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


பெங்களூருவில் சம்பவம் பள்ளி கழிவறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 15 Sept 2017 2:30 AM IST (Updated: 15 Sept 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், பள்ளி கழிவறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற போலீசாரின் சுற்றறிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெங்களூரு,

பெங்களூருவில், பள்ளி கழிவறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற போலீசாரின் சுற்றறிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாலியல் வன்கொடுமைகள்

பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள், காவலாளிகள், பள்ளியில் பணி செய்யும் உதவியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பாலியல் குற்றங்களை தடுத்து மாணவ–மாணவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், காவலாளிகள் உள்பட அனைத்து ஊழியர்களின் நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். அவர்களின் முகவரிகள் மற்றும் பின்புலத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினருக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். மேலும், பள்ளி வளாகம், வகுப்பறை, மாணவ–மாணவிகள் பயணிக்கும் பள்ளி வாகனம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

கழிவறையில் கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில், சமீபத்தில் 12 தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ‘பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இது பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் சுற்றறிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த கூறினோம். கழிவறைக்கு செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதற்காக சுற்றறிக்கை அனுப்பினோம். ஆனால், அது தட்டச்சு பிழையாகிவிட்டது. இந்த பிழையை திருத்தி பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்புவோம்’ என்றார்.


Next Story