மோட்டார் சைக்கிள்– அரசு பஸ் மோதல்; சப்–இன்ஸ்பெக்டர் சாவு பதவி ஏற்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்
ஹரிகரா அருகே, மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்
சிக்கமகளூரு,
ஹரிகரா அருகே, மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். சப்–இன்ஸ்பெக்டராக பதவி ஏற்க சென்றவருக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.
சப்–இன்ஸ்பெக்டராக பதவி ஏற்க சென்றார்தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா அருகே உள்ள ராமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 26). இவர் தாவணகெரே டவுன் கே.ஆர்.போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மஞ்சுநாத்துக்கு ஹரிகரா அருகே உள்ள ஒசஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒசஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக தனது பதவியை ஏற்றுக்கொள்ள மஞ்சுநாத் தாவணகெரேயில் இருந்து ஒசஹள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மஞ்சுநாத்துடன் அவரது தம்பி பசவராஜும் சென்றார். மோட்டார் சைக்கிளை பசவராஜ் ஓட்டினார்.
சாவுஅவர்கள் ஹரிகரா– உப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக உப்பள்ளியில் இருந்து சிவமொக்காவுக்கு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசவராஜ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹரிகரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஹரிகரா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் விபத்தில் இறந்த மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹரிகரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.