பசுமை தீர்ப்பாயம் உள்பட அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு திட்டம்


பசுமை தீர்ப்பாயம் உள்பட அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:15 AM IST (Updated: 15 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

பசுமை தீர்ப்பாயம் உள்பட அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது என்று வைகோ கூறினார்.

திருச்சி,

தஞ்சாவூரில் நாளை (இன்று) நடைபெற உள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டம், கூட்டணி பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 3 தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக வாதாடிய ராம்ஜெத் மலானியை சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்காக மும்பை சென்றிருந்தேன்.

ராம்ஜெத்மலானி, இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மதசார்பின்மை காப்பாற்றப்பட வேண்டுமானால் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும், அதற்கு மாநில கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை தருவதாக அவருக்கு உறுதி அளித்து விட்டு வந்திருக்கிறேன்.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் நான் ஆஜராகி வாதாடினேன்.

அப்போது ஜெம் லேபரட்டரி சார்பில் ஆஜர் ஆனவர்கள் நாங்கள் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு உரிமம் பெற்று விட்டோம். எனவே நாங்கள் எல்லா இடங்களிலும் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்போம் என்று பதில் அளித்தார்கள்.

இதனால் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது. பசுமை தீர்ப்பாயம் உள்பட அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரகசிய திட்டம் தீட்டி உள்ளது. இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, இளைஞர் அணி செயலாளர் ராஜன் இளமுருகு உள்பட பிரமுகர்கள் வைகோவுக்கு வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் வைகோ கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். 

Related Tags :
Next Story