ரூ.50 லட்சம் கேட்டு கடத்தி கொலை வாலிபர் உடல் தோண்டி எடுப்பு
ரூ.50 லட்சம் கேட்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் 8-வது தெருவில் வசித்து வருபவர் அஜெய்குமார். இவர், திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பணியில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அவினாஸ் பூசன்(வயது 28). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார்.
கடந்த 7-ந்தேதி மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவினாஸ் பூசன், அதன்பிறகு மாயமானார். விசாரணையில் அவருடைய நண்பர்களே திட்டமிட்டு ரூ.50 லட்சம் கேட்டு அவரை கடத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இது தொடர்பாக அவினாஸ் பூசனின் நெருங்கிய நண்பரான சடையங்குப்பம் பர்மா நகர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி வெங்கடேசன்(30) மற்றும் அவரது நண்பரான பீகாரை சேர்ந்த ரமேஷ்(24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் மற்றொரு குற்றவாளியான சூர்யா(27) தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டமிட்டு கொலை
அவினாஸ் பூசனின் தந்தை அஜெய்குமார், மெட்ரோ ரெயிலில் வேலை பார்ப்பதால் அவரிடம் நிறைய பணம் இருக்கும். அவினாஸ் பூசனை கடத்தி, அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டலாம். இதற்கு அவினாஸ் பூசன் ஒத்துழைக்காவிட்டால் அவரை கொலை செய்து விட்டு அவரது தந்தையிடம் பணம் பறிக்கலாம் என வெங்கடேசன், ரமேஷ், சூர்யா 3 பேரும் திட்டமிட்டனர்.
ஆனால் இந்த திட்டத்துக்கு அவினாஸ் பூசன் மறுத்ததால், வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேரும் ஏற்கனவே தாங்கள் திட்டமிட்டபடி, அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக தயார் நிலையில் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் அவினாஸ் பூசன் தலையில் தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை அங்குள்ள புதரில் ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டி புதைத்தனர். அதன் மீது தொழிற்சாலைகளில் இருந்து கொட்டப்பட்டு கிடந்த சுண்ணாம்பு கழிவுகளை கொண்டு சமாதி போல் அமைத்தனர். பின்னர் அவரது சிம்கார்டு மூலம் அவரது தந்தைக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரிந்தது.
உடல் தோண்டி எடுப்பு
அவினாஸ் பூசன் மாயமான போது அவரது தந்தை அஜெய்குமார் அவரை பல இடங்களில் தேடினார். அப்போது வெங்கடேசனும், எதுவும் தெரியாதது போல் அவருடன் சேர்ந்து அவினாஸ் பூசனை தேடும் பணியில் ஈடுபட்டார்.
அவினாஸ் பூசன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். நேற்று மதியம் வெங்கடேசன், ரமேஷ் இருவரையும் போலீசார் ஆம்புலன்சில் மறைத்து வைத்து சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவினாஸ் பூசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை இருவரும் அடையாளம் காட்டினர்.
தாசில்தார் செந்தில்நாதன் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரியதர்ஷினி அங்கேயே அவினாஸ் பூசன் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவினாஸ் பூசன் உடல் தோண்டி எடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story