பெண் கொலை-கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் மருமகன் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீஸ்காரர் மருமகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டன.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் 2-வது தெருவை சேர்ந்தவர் கலா (வயது 52). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 8-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த இவர், படுகொலை செய்யப்பட்டார். 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கொலையாளியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பர்வேஸ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ஒப்புக்கொண்டார்
கலா வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்த மீனவர் பன்னீர்செல்வம் (46) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கலாவிடம் கொள்ளையடித்த நகைகளை மெரினா கடற்கரையில் தான் மீன் பிடிக்கும் படகுக்கு அடியில் கடற்கரை மணலில் புதைத்து வைத்து, அதற்கு மேல் மீன்பிடி வலைகளை போட்டு வைத்துள்ளதாக கூறினார்.
நேற்று முன்தினம் இரவு அவரை தனிப்படை போலீசார் மெரினா கடற்கரைக்கு அவரை அழைத்து சென்று 40 பவுன் நகைகளை பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு தான் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்ட தகவலை போலீசார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
உல்லாசத்துக்கு அழைத்தார்
பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:-
மனைவி மற்றும் 2 மகன்களுடன் கவுரவமாக வாழ்ந்து வந்த என்னை குடிப்பழக்கம் தவறான பாதைக்கு அழைத்து சென்றது. சம்பவத்தன்று கலா தன்னை அவரது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என அழைத்தார். இதனால் நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திடீரென கலா என்னை கட்டிப்பிடித்து உல்லாசத்துக்கு அழைத்தார்.
அதற்கு நான் மறுத்ததால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான், கீழே தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தால், நம்மை போலீசில் காட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்து அவரது கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்தேன்.
தப்பிச்சென்றேன்
பின்னர் அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு நைசாக தப்பிச்சென்றேன். கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்கள் மது அருந்தி ஜாலியாக பொழுதை கழித்தேன். இரவு வீட்டுக்கும் போகாமல் மெரினா கடற்கரையில் படுத்து தூங்கினேன். இதற்கிடையே போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வம் போலீஸ்காரர் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story