தமிழகத்தில் அசல் உரிமம் வைத்திருப்பதில் கனரக ஓட்டுனர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்


தமிழகத்தில் அசல் உரிமம் வைத்திருப்பதில் கனரக ஓட்டுனர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:15 AM IST (Updated: 15 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அசல் உரிமம் வைத்திருப்பதில் கனரக ஓட்டுனர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏற்காடு,

ஏற்காட்டில், நேற்று மாலை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 28-வது மகாசபை கூட்டம் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் தன்ராஜ், சேலம் மாவட்ட தலைவர் சென்னகேசவன், எடப்பாடி சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குமாரசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் சிரமம் ஏற்படும். அசல் உரிமம் தொலைந்து போனால் மீண்டும் அதை பெறுவதிலும் சிரமம் உள்ளது. அசல் ஆவணம் இல்லாவிட்டால் விபத்து ஏற்படும்போது டிரைவர்கள் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு விபத்து காப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

விலக்கு வேண்டும்

தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான கனரக வாகனங்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி அசல் ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்யும்போது போக்குவரத்து நெரிசலுடன் காலதாமதம் ஏற்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்வது தடைபடும். தமிழகத்தில் லாரி டிரைவர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் வடமாநில லாரி டிரைவர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

எனவே, அவர்களது அசல் ஓட்டுனர் உரிமம்தான் எங்களுக்கு பாதுகாப்பாக அமையும். ஏனென்றால், விபத்து நடந்தால் அந்த வழக்கை அவர்களே சந்திக்கவும் முடியும். எனவே, அசல் ஓட்டுனர் உரிமம் உத்தரவை திரும்ப பெற வேண்டும். அல்லது அசல் உரிமம் வைத்திருப்பதில் கனகர வாகன ஓட்டுனர்களுக்கு விலக்கு கொடுக்க வேண்டும்.

மதிப்பு கூட்டுவரி

கர்நாடக மாநிலத்தில் டீசலின் மீதான மதிப்புக்கூட்டுவரி குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் குறைக்கப்பட வேண்டும். லாரி தொழிலை சார்ந்தவர்களுக்கு தனிநல வாரியம் ஏற்படுத்தி லாரி உரிமையாளர்களுக்கும், அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் முன்னேற்றத்திற்கு உதவி செய்திட தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Tags :
Next Story