சொத்துவரி-தொழில் வரியை இன்றும், நாளையும் செலுத்தலாம் மாநகராட்சி ஏற்பாடு
சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 15 மண்டலங்களிலும் இன்றும் நாளையும் சொத்துவரி-தொழில்வரி வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இந்த அரையாண்டுக் கான (ஏப்ரல்-செப்டம்பர்) சொத்துவரி-தொழில் வரி திட்டகாலம் இம்மாதம் 30-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. 2 வகையான வரிகளிலும் ரூ.500 கோடிக்கும் மேல் பாக்கித்தொகையாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் (ஆயுதபூஜை), நாளையும் (விஜயதசமி) அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே நிலுவைத்தொகை அதிகமாக இருக்கும் சமயத்தில் வரி வசூலிப்பு பாதிக்கக்கூடாது என்ற வகையில் மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும் சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 15 மண்டலங்களிலும் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சொத்துவரி-தொழில்வரி வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக உரிம ஆய்வாளர்கள் மற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். வரி வசூல் பணியை தீவிரமாக மேற்பார்வையிடும்படி மண்டல உதவி வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. எனவே இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் வரி செலுத்தலாம். “இந்த 2 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தும் பட்சத்தில் மாநகராட்சி நடவடிக்கை தவிர்க்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பாக்கி தொகையை செலுத்திட வேண்டும்”, என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story