இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 படகுகள் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டன
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 படகுகளை தனிக்குழு மீட்டு ராமேசுவரம் கொண்டு வந்தது.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 179 படகுகளை விடுவிக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதில் முதல் கட்டமாக 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள், மீனவர்கள் உள்பட 53 பேர் கொண்ட தனிக்குழுவினர் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டுவர 7 படகுகளில் இலங்கைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் விடுவிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டபின், முதல் கட்டமாக 6 படகுகளை தமிழகம் கொண்டுவர முடிவு செய்தனர். இதையடுத்து அந்த 6 படகுகளுடன் தனிக்குழுவினரை இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.
அங்கிருந்து தனிக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு 6 படகுகளுடன் ராமேசுவரம் துறைமுகம் வந்தடைந்தனர்.
விடுவிக்கப்பட்ட மீதமுள்ள படகுகளை கொண்டு வர, நேற்று ராமேசுவரத்தில் இருந்து 4 படகுகளில் 29 மீனவர்களும், புதுக்கோட்டையில் இருந்து 5 படகுகளில் 22 மீனவர்களும் இலங்கை சென்றுள்ளனர். இவர்கள் மீதமுள்ள படகுகளை மீட்டு ஓரிரு நாளில் தமிழகம் வர உள்ளனர்.