ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதல்; அக்காள், தம்பி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் அக்காள், தம்பி பரிதாபமாக பலியாகினர்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ரகுநாதன்(வயது 53). இவர் ஓசூரில் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி(48). இவர்கள் ஓசூரில் இருந்து காரில் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை சாந்தியின் தம்பி நாகேந்திரன்(45) ஓட்டி வந்தார்.
கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கம்பத்துபட்டி விலக்கு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான முருகன்(48) மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நகர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வந்தவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்து போனார். இந்த விபத்தில் சைக்கிளில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.