சித்தோட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் ஆய்வு
சித்தோடு பேரூராட்சிக்கு உள்பட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.
ஈரோடு,
சித்தோடு பேரூராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர், நடுப்பாளையம் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது அவர், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறும்போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன்பே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தால் நடமாடும் மருத்துவக்குழுவினர் குறிப்பிட்ட இடத்தில் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை மேற்கொள்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 28 பள்ளி சுகாதார நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் சென்று காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பரவுதலை தடுக்கும் பணியில் மொத்தம் 1,950 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை 20 மண்டல அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
இதேபோல் ஈரோடு மாநகராட்சி 32–வது வார்டுக்கு உள்பட்ட நசியனூர்ரோடு பகுதியில் நடந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார்.