செம்மஞ்சேரியில் குட்டையில் மூழ்கி மாணவன் சாவு
செம்மஞ்சேரியில் குட்டையில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லலூரை அடுத்த செம்மஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் மயிலா£ப்பூரில் தனியார் டிராவல்ஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள். அவர்களில் 2–வது மகன் பிரவீன்குமார்(வயது 6). தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக கணவன்–மனைவி இருவரும் வீட்டு வேலையில் மும்முரமாக இருந்தனர்.
அப்பொழுது வீட்டில் இருந்த பிரவீன்குமார் விளையாடுவதற்காக வீட்டின் பின்புறம் உள்ள குட்டைக்கு சென்றதாக தெரிகிறது. வேலைகளை முடித்துவிட்டு கணவன், மனைவி இருவரும் பிரவீன்குமாரை தேடினர். பிரவீன்குமார் கிடைக்காததால் இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை தேடி வந்தனர். இதற்கிடையில் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு இரவு 3 மணியளவில் குட்டையில் இருந்து பிரவீன்குமார் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரவீன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குட்டை அருகே விளையாட சென்ற சிறுவன் எவ்வாறு குட்டையில் மூழ்கி இறந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.