மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலம் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு சித்தராமையா தொடங்கி வைத்தார்


மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலம் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு சித்தராமையா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Oct 2017 5:15 AM IST (Updated: 1 Oct 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

தங்க அம்பாரியில் சாமுண்டீசுவரி அம்மன் பவனி வர கண்கவர் அலங்கார வண்டிகளுடன் மைசூருவில் தசரா ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. சாமுண்டீசுவரி அம்மன் மீது மலர் தூவி ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

மைசூரு,

மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா சுமார் 700 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது.

தசரா விழா

மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக ஸ்ரீரங்கப்பட்டணாவில் இந்த விழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் ‘யது’ வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் தசரா விழாவை மைசூருவில் கொண்டாட தொடங்கினர்.
இருப்பினும் நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில் இருந்து தான் மைசூரு தசரா விழா உலகமே அறிந்து கொள்ளும் வகையில் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் தசரா விழா சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிஞர் நிசார் அகமது

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா, கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இது 407-வது தசரா விழா ஆகும். கடந்த 21-ந்தேதி மைசூரு சாமுண்டிமலையில் குடிக்கொண்டிருக்கும் காவல்தெய்வமான சாமுண்டீசுவரிக்கு கன்னட கவிஞர் நிசார் அகமது முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி, விவசாய தசரா, விளையாட்டு போட்டிகள், இளைஞர் தசரா, மகளிர் தசரா, உணவு மேளா, திரைப்பட விழா உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தினமும் நடந்து வந்தன. அந்த கலை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டுகளித்து வந்தனர்.

மல்யுத்த போட்டி

தசரா விழாவின் நிறைவு நாளான நேற்று சிகர நிகழ்வாக ‘ஜம்பு சவாரி‘ என்னும் மைசூரு தசரா ஊர்வலம் நடந்தது. முன்னதாக நேற்று காலை 8 மணி முதல் காலை 9 மணிக்குள் ‘முஸ்டி காளகா‘ என்னும் மல்யுத்த போட்டி நடந்தது. பாரம்பரியமாக இந்த போட்டியில் பங்கேற்கும் இரு வீரர்களும் மொட்டையடித்துக் கொண்டு கூர்மையான ஆயுதத்துடன் மோதுவார்கள். இதில் ஒரு வீரருக்கு ரத்தம் சிந்தும் வரை போட்டி நடக்கும். சிறப்புவாய்ந்த இந்த போட்டியை இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தொடங்கிவைத்தார். இந்த போட்டியில் 2 வீரர்கள் கூர்மையான ஆயுதத்துடன் மோதினார்கள். இதில் ஒரு வீரரின் தலையில் ரத்தம் வழிந்ததும் போட்டி நிறுத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு யதுவீர் பரிசு வழங்கி பாராட்டினார்.

அதன்பின்னர் விஜயதசமி விழா ஏற்பாடுகள் தொடங்கின. பட்டத்து கத்தி மற்றும் பட்டத்து யானைகளுக்கு யதுவீர் பூஜைகள் செய்து அரண்மனை வளாகத்தில், தேரில் ஊர்வலமாக வந்தார். பின்னர் அரண்மனை வளாகத்தில் திரிநேஷ்வரர் கோவில் முன்பு இருக்கும் பன்னி மரத்திற்கு யதுவீர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

நந்தி தூணுக்கு சிறப்பு பூஜை

இதைத்தொடர்ந்து சரியாக மதியம் 2.20 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா அரண்மனை முன்புள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தி தூணுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் சாமுண்டீசுவரி அம்மனை நினைத்து வழிபட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை இல்லை. சாமுண்டீசுவரி அருளால் ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் நல்ல மழை பெய்துள்ளது. தொடர் மழையால் அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு வராது. நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது நடக்கட்டும் என்று சாமுண்டீசுவரி அம்மனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் தசரா நல்வாழ்த்துகள்” என்றார்.

அலங்கார வண்டிகள் ஊர்வலம்

அதையடுத்து மதியம் 2.40 மணிக்கு கண்கவர் அலங்கார வண்டிகளின் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் கர்நாடகம் மற்றும் இந்திய கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையிலான ஊர்திகள், அரசு சாதனைகளை விளக்கும் அலங்கார வாகனங்கள், வரலாற்று சின்னங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையிலான வாகனங்கள் என 40 அலங்கார வண்டிகள் கலந்துகொண்டன.

இதில், மரங்களை காப்பது மற்றும் மழை நீர் சேமிப்பை வலியுறுத்திய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பேண்டுவாத்தியக் குழுவினர், டிரம்ஸ் குழுவினர், செண்டைமேளக் குழுவினர், கலை, கலாசார நடனக் குழுவினர் என 45-க்கும் மேற்பட்ட குழுவினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பன்னிமண்டபத்தை சென்றடைந்தது.

ஜம்பு சவாரி

இதற்கிடையே கும்ப லக்கனத்தில் மாலை 5.05 மணிக்கு சாமுண்டீசுவரி அம்மன் எழுந்தருளி இருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா யானை அரண்மனையில் அமைக்கப்பட்டு இருந்த உயரமான மேடை அருகே வந்தது. அப்போது மேடையில் நின்றபடி முதல்-மந்திரி சித்தராமையா, அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீசுவரி அம்மன் மீது மலர்களை தூவி மரியாதை செய்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். அப்போது 21 தடவை பீரங்கி குண்டுகள் முழங்கின. அப்போது அர்ஜூனா யானையின் இருபுறமும் நின்ற விஜயா, காவேரி யானைகள் தும்பிக்கைகளை தூக்கி வணங்கின. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் யதுவீர், மந்திரி மகாதேவப்பா, கலெக்டர் ரன்தீப், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணீஷ்வரர் ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா கம்பீரமாக ராஜவீதியில் நடந்து சென்றது. அதன் பின்னால் பலராமா, கோபாலசுவாமி யானைகளும், ஹர்ஷா, கஜேந்திரா, பிரசாந்தா ஆகிய யானைகள் கலைக்குழுவினர் நடுவிலும் சென்றது. அபிமன்யூ யானை வழக்கம்போல் போலீஸ் இசை வாத்தியக் குழுவினரின் வண்டியை இழுத்துச் சென்றது. கோபி யானை, பட்டத்துயானையாக ஊர்வலத்தில் பங்கேற்றது. வரலட்சுமி, கிருஷ்ணா, துரோணா, விக்ரமா, பீமா உள்ளிட்ட யானைகளும் சென்றன. அத்துடன் குதிரைபடை, போலீஸ் வாத்தியக் குழு, ராணுவ பேண்டு வாத்தியக் குழுவினர், தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள், பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளும் அணிவகுத்து சென்றனர்.

கவர்னர் வஜூபாய் வாலா

வழிநெடுகிலும் உள்ள கட்டிடங்கள் மீதும், சாலையோரமாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று அலங்கார வண்டிகள் ஊர்வலம், ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். சுமார் 5 லட்சம் பேர் மைசூரு தசரா விழா ஊர்வலத்தை கண்டு ரசித்ததாக கூறப்படுகிறது. இந்த ஊர்வலம் இரவு 7 மணி அளவில் பன்னிமண்டபத்தை சென்றடைந்தது.

அப்போது அர்ஜூனா யானை மீது இருந்த தங்க அம்பாரி கீழே இறக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க அம்பாரி ஒரு வாகனத்தில் மைசூரு அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்குள்ள மேடையில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி சித்தராமையா, இளவரசர் யதுவீர், மந்திரிகள் மகாதேவப்பா, உமாஸ்ரீ, தன்வீர்சேட், மேயர் ரவிக்குமார், கலெக்டர் ரன்தீப் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட போலீஸ் குழுவினர் உள்பட அனைத்து குழுவினரின் அணிவகுப்பும் நடந்தது. இதனை கவர்னர் வஜூபாய் வாலா திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். இரவு 7.30 மணிக்கு தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியான தீப்பந்த விளையாட்டு மற்றும் சாகச நிகழ்ச்சிகளை கவர்னர் வஜூபாய் வாலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

சாகச நிகழ்ச்சிகள்

இதில் ஆயுதப்படை போலீசார், சாகச வீரர்கள் பல்வேறு சாகசங்களை நடத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கு இடையிடையே நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடந்தன. “லேசர் லைட் ஷோ” நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து தசரா விழா நிறைவு பெற்றது. இறுதியில் விண்ணை அதிரவைக்கும் வகையில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

தசரா விழாவையொட்டி மைசூரு நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஷ்வரர் ராவ், போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவர் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஊர்வலம் நடந்த மைசூரு அரண்மனை முதல் பன்னிமண்டபம் வரை ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல்படையினர் என 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி நேற்று மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மேலும் மைசூரு அரண்மனை உள்பட பல்வேறு கட்டிடங்களும், மைசூரு நகர வீதிகளும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தன.

Next Story