நெல்லையில் தசரா விழா கோலாகலம்: 41 அம்மன் சப்பரங்கள் பவனி


நெல்லையில் தசரா விழா கோலாகலம்: 41 அம்மன் சப்பரங்கள் பவனி
x
தினத்தந்தி 1 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவையொட்டி நெல்லை டவுன், பாளையங்கோட்டையில் 41 அம்மன் சப்பரங்கள் பவனி நேற்று நடந்தது.

நெல்லை,

நெல்லையில் பாளையங்கோட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், கொக்கிரகுளம், பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தசரா விழா களைகட்டி உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராச்சியம்மன், முப்புடாதி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், தூத்துவாரி அம்மன், யாதவர் உச்சிமாகாளி, விசுகர்மா உச்சிமாகாளி, கிழக்கு உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி ஆகிய 12 அம்மன் கோவில்களிலும் தசரா விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு சிறப்பு துர்கா ஹோமமும், மதியம் 1 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 11 மணிக்கு அனைத்து கோவில்களில் இருந்தும் அம்மன் சப்பரங்கள் புறப்பட்டு வீதிகளில் பவனி வந்தன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கும். மதியம் 2 மணிக்கு அந்த சப்பரங்கள் பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் திடலையும், இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட்டையும் வந்தடையும். நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நின்று சூரசம்ஹாரம் நடக்கும்.

நெல்லை டவுன்

நெல்லை டவுனில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன், வாகையடி முப்புடாதி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், சாலியர்தெரு மாரியம்மன், துர்க்கையம்மன், நல்லமுத்தம்மன், தங்கம்மன், காந்தாரிஅம்மன், ஆயுள்பிராட்டி அம்மன், ராஜராஜேசுவரி அம்மன், அறம்வளர்த்தநாயகியம்மன், முத்தாரம்மன், வலம்புரியம்மன், சுந்தராட்சியம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்ளிட்ட 29 அம்மன் கோவில்களில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் அந்தந்த கோவில்களில் இருந்து அம்மன் சப்பரங்கள் புறப்பட்டு வீதி உலா நடந்தது. பின்னர் அனைத்து சப்பரங்களும் சாலியர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்று அம்புவிடுதல் நடந்தது. தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் நெல்லையப்பர் கோவில் முன்பு அணிவகுத்து நின்று சென்றன.

29 அம்மன் கோவில் சப்பரங்களும் நெல்லையப்பர் கோவில் முன்பு அணிவகுத்து நின்ற இடத்திற்கு அருகில் நஞ்சுண்டேசுவரர், சுருட்டப்பள்ளி சிவபெருமான் சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அம்மன்கள் சப்பர பவனியையொட்டி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. 

Related Tags :
Next Story