நாக்பூர் தசரா கொண்டாட்டத்தில் மோடியின் துணிச்சலான முடிவுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு


நாக்பூர் தசரா கொண்டாட்டத்தில் மோடியின் துணிச்சலான முடிவுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
x
தினத்தந்தி 1 Oct 2017 5:02 AM IST (Updated: 1 Oct 2017 6:00 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூர் தசரா கொண்டாட்டத்தில் மோடியின் துணிச்சலான முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பாராட்டினார்.

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், நாக்பூரில் தசரா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் துணிச்சலான முடிவுகள் எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதே நேரத்தில், நாட்டின் தற்போதைய பொருளாதார கொள்கைகளை அவர் விமர்சித்து, குட்டு வைக்க தவறவில்லை.

மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

பசுக்கள் பாதுகாப்பும், பசுக்களை அடிப்படையாக கொண்ட விவசாயமும் நமது அரசியல் சாசனத்தில் வழிகாட்டப்பட்டுள்ளவை ஆகும். பசுக்கள் வளர்ப்பு என்பது மதத்துக்கு அப்பாற்பட்டது. பசுக்களை கடத்தி செல்வது எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக வங்காளதேச எல்லை மாநிலங்களில் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பசு பாதுகாப்பு செயல்பாடுகள், மிக மதிப்பு வாய்ந்தவை. ஆனால் பசு பாதுகாப்பில் அமைதியான முறையில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுள்ளனர்.

ரோஹிங்யாக்களை பொறுத்தமட்டில் அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலானவர்கள். அவர்கள் நமது வேலைவாய்ப்புகளுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள். ரோஹிங்யாக்களுக்கும், பயங்கரவாத சக்திகளுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்தகைய சக்திகள் நமது நாட்டுக்கு வந்தால், நமது நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
நமது நாட்டில் இன்னும் அகதிகள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

நமது நிதி ஆயோக்கும், நாட்டின் பொருளாதார ஆலோசகர்களும் பழைய பொருளாதார வாதத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் நடப்பு பொருளாதார அனுபவங்களை, நாட்டின் கள நிலவரத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

உள்நாட்டு மொத்த உற்பத்திதான், இன்றைக்கும் நாட்டின் பொருளாதார நிலையையும், வளர்ச்சியையும் குறிப்பிட அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில், வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதில் சிறு, நடுத்தர, கைவினை தொழில் துறை, சில்லரை வணிகம், கூட்டுறவுத்துறை, விவசாயம் சார்ந்த தொழில் துறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைதான் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார நில நடுக்கங்கள், ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் நமது பாதுகாப்பு அரணாக திகழ்கின்றன.

பொருளாதார அமைப்புகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வருகிறபோது, அதிர்வுகளும், நிலையற்ற தன்மையும் எதிர்பார்க்கக்கூடியதுதான். ஆனால், இந்த துறைகள் குறைவான பாதிப்பை சந்திக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இறுதியில் அவை அதிகபட்ச பலம் பெறுவதாக அமைய வேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உலகளாவிய கொள்கைகள், தவறானவை, செயற்கையானவை, வளம் ஏற்படுவதுபோன்ற மாயையை ஏற்படுத்துபவை. அவை அறநெறிகளையும், சுற்றுச்சூழலையும், வேலை வாய்ப்பினையும், சுய சார்புத்தன்மையையும் செல்லரித்து போகச் செய்பவை. இந்த கொள்கைகளைப் பொறுத்தமட்டில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னேற்றத்துக்கான தனித்துவமான மாதிரிகளை கொண்ட நாட்டை உருவாக்குங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story