கம்பிகளுக்குப் பின்னே ஒரு கலைக்கூடம்!


கம்பிகளுக்குப் பின்னே ஒரு கலைக்கூடம்!
x
தினத்தந்தி 1 Oct 2017 6:00 PM IST (Updated: 1 Oct 2017 1:38 PM IST)
t-max-icont-min-icon

அந்த இடத்தில் மெல்ல நடந்தால் மனதுக்குள் ஒருவித அமைதி வந்து அமர்கிறது. காற்றிலும் கலை மணப்பது போன்ற உணர்வு.

ந்த இடத்தில் மெல்ல நடந்தால் மனதுக்குள் ஒருவித அமைதி வந்து அமர்கிறது. காற்றிலும் கலை மணப்பது போன்ற உணர்வு.

பால் வெண்மை சுவர் பின்னணியில், ‘பளிச்’ வண்ணங்களில் காணப்படும் ஓவியங்கள், அவற்றில் செறிந்திருக்கும் ஆழ்ந்த அர்த்தம் எல்லாம் மனதுக்குள் ஏதோ மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன.

ஓவியங்களுக்கு பிரத்யேகமாக வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகளுடன் கூடிய நவீன ஓவியக் காட்சிக்கூடம், புரொஜெக்டர்கள் கொண்ட அறைகள், பயிலரங்கக் கூடங்கள், சிற்ப வடிவமைப்பகம், இவை எல்லாவற்றுக்கும் முன் பரந்து விரிந்திருக்கும் பசும் புல்வெளி...

இது ஏதோ மாநகரில் அமைத்திருக்கும் கலைக்கூடம் பற்றிய வர்ணனை இல்லை. நெடிதுயர்ந்த மதில்கள், பாதுகாப்பு கெடுபிடிகள் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய சிறைச்சாலையான டெல்லி திகார் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் கலைக்கூடம் பற்றிய குறிப்பு.

இந்தக் கலைக்கூடத்தில் காணப்படும் ஓவியங்கள், கலைப்படைப்புகளைப் படைத்தவர்கள், சிறையில் உள்ள கைதிகளே. இதன் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் பரந்த அரங்கில், அந்த அமைதியான சூழலில், பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவிப்பவர் களும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் களும் ஓவியம் தீட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்களின் முன்புள்ள கான்வாஸ் அல்லது வெள்ளைத் தாளில் வர்ண ஜாலம் நடக்கிறது, மெல்ல மெல்ல அங்கு ஒரு ஓவியம் உயிர்ப்பெறு கிறது.

இந்த ‘சிறை ஓவியர்களில்’ பலரும் இங்குதான் முதல்முறையாக பிரஷ் பிடிப்பவர்கள். ஆனால் அவர்களின் படைப்புகள், பிரபல ஓவியர்களின் கைவண்ணங்களுக்கே சவால் விடுகின்றன. பல நவீன பாணி ஓவியங்கள், நம்மை நீண்ட நேரம் சிந்திக்கச் செய்கின்றன.

உதாரணத்துக்கு, முகமது அயூப் என்ற, கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி யிருக்கிற 28 வயது இளைஞர் வரைந்திருக்கும் படம்.

அதாவது, கம்பிகளுக்குப் பின்னே உள்ளே ஓர் முகம். கண் புருவங்கள் வரை மட்டுமே கம்பிகள் காணப்படுகின்றன. அதற்கு மேலே, வண்ண அலைகள் எழுகின்றன.

“யாராலும் ஒருவரது உடம்பைத்தான் சிறைப்படுத்த முடியுமே தவிர, மனதைச் சிறைப்படுத்த முடியாது. அதைத்தான் எனது இந்த ஓவியம் பிரதிபலிக்கிறது” -அவர் சொல்லும் வார்த்தைகளை அவரது முகமும் எதிரொலிக்கிறது.

இவர் வரைந்திருக்கும் இன்னொரு படம், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்தும் ஒரு தம்பதி.

“இந்தப் படத்தில் இருக்கும் ஆண் நான்தான். என் மனைவியுடன் இப்படி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்த வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் நான் திருமணத்துக்குத் தயாரானபோதுதான் என் வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது....” அயூப்பின் குரல் கொஞ்சம் கம்முகிறது.

அவர் தன் மீதான கொலைக்குற்றச்சாட்டுப் பற்றிப் பேச விரும்பவில்லை. அவர் ஆர்வமாகப் பேச முற்படுவதெல்லாம், தான் திகாரில் ஓர் ஓவியனாக உருவானதைப் பற்றியும், இனி ஓவியனாகவே வாழ்வைத் தொடரப் போவதைப் பற்றியும்தான்.

அயூப்பைப் போல இந்தச் சிறை ஓவியர்கள் பலருக்கும், சிறை வாழ்வின் கடினத்தைத் தாண்டி வருவதற்கும், தங்கள் உள்முகமாகப் பார்ப்பதற்கும், மன அமைதி பெறுவதற்கும் ஓவியம் உதவுகிறது.

ஆயில், அக்ரிலிக், வாட்டர் பெயிண்ட் எல்லாவற்றையும் வைத்து இவர்கள் ஓவியம் தீட்டு கிறார்கள், களிமண்ணில் உருவங்களைப் படைக்கிறார்கள்.

சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்த்தால்... தெருக் காட்சிகள், மெட்ரோ ரெயில், பெண்கள், குடில்கள், நிலப்பரப்புக் காட்சிகள் என்று இனிமையான கலவையாக இருக்கின்றன.



வழிப்பறிக் குற்றவாளியான அருண்குமார், ஓர் அழகான புத்தர் ஓவியத்தை வரைந் திருக்கிறார்.

“புத்தர் ஓவியத்தை வரைந்தது, எனக்குள் மிகுந்த அமைதியைக் கொண்டுவந்திருக் கிறது” என்கிறார் அருண். தொடர்ந்து அவர், “இங்கே வந்து தூரிகையைப் பிடித்த நாள் முதல், எனக்குள் இருந்த வெறுமை தொலைந்துவிட்டது, எனது அன்புக்குரியவர்களைப் பிரிந்திருக்கும் வலி மறைந்துவிட்டது” என்கிறார்.

திகாரில் 4-ம் எண் சிறை வளாகத்தில் இந்த கலைக்கூடம் அமைந் திருக்கிறது. இதன் சூப்பிரண்டான ராஜேஷ் சவுகான், சிறைவாசிகள் தங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இக்கூடம் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார். சிறைவாசிகளின் மறுவாழ்வும் மற்றொரு நோக்கம் என்கிறார்.

“இந்தக் கலைப் பள்ளியில் இணைந்த பல கைதிகளிடம் கோபம் தணிந்துவிட்டதையும், தங்களுக்குள் சண்டையிடுவது குறைந்துவிட்டதையும் நான் காண்கிறேன். கலைக்கு அப்படி ஓர் அற்புத ஆற்றல் இருக்கிறது. சிறைவாசிகளுக்கு, குறிப்பாக, தாங்கள் செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதாக நினைப்பவர் களுக்கு ஓவியம் ஒரு வடிகாலாக அமைகிறது” என்று ராஜேஷ் சவுகான் விளக்குகிறார்.

சிறைத் தொகுதி நான்கில் உள்ள 2800 சிறைவாசிகளில் 100 பேர் இந்த கலைக்கூடத்துக்கு வருகின்றனர். இங்கு தினமும் 6 முதல் 8 மணி நேரத்தைச் செலவழிக்கின்றனர்.

இவர்களின் கலைப்படைப்புகள் பலவும், அவற்றின் நுட்பம், நேர்த்தி, தனித்தன்மையில் வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. திடீர் நிகழ்வுகள் எப்படி ஒருவனின் வாழ்வை தடாலடியாகப் புரட்டிப் போட்டுவிடுகின்றன, சூழ்நிலைக் குற்றவாளியாக இருப்பதன் வலி என்ன என்று பிரதிபலிப்பதாக பல படைப்புகள் உள்ளன.

தனது சிறை ஓவியர்கள் குறித்துப் பேசும்போது சூப்பிரண்டு ராஜேஷ் சவுகான் முகத்தில் பெருமிதம் மிளிர்கிறது. கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, இந்த ஓவியர்களுக்கு கலைப் பட்டயம் பெற்றுக்கொடுக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அதுபோன்ற அடுத்தகட்ட முயற்சியின் ஓர் அங்கமாக, சமீபத்தில் இந்தச் சிறை ஓவியர் களுக்கு டெல்லி நுண்கலைக் கல்லூரி முதுகலை மாணவர்கள் சிலரும், லலித் கலா அகாடமியைச் சார்ந்த பிரபல ஓவியர்களும் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

திகார் கலைப்பள்ளிக்கு, புகழ்பெற்ற ஓவியர்களது படைப்புகளின் நகல்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும், முன்னணி ஓவியர்கள் குறித்த ஆவணப்படங்களையும்கூட லலித் கலா அகாடமி இலவசமாக வழங்கியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிறைக் கலைஞர்களின் கலைப் படைப்புகளைக் கொண்டு சமீபத்தில் வெளியே ஒரு கண்காட்சியையும் அகாடமி நடத்தியிருக்கிறது.

தற்போது சுஷ்மா யாதவ் என்ற ஓவிய ஆசிரியர் தினமும் சிறைக்கு வந்து சிறைவாசிகளுக்கு ஓவியக் கலையைப் பயிற்றுவிக் கிறார்.

“இவர்களில் சிலர் மிகத் திறமையானவர்கள், ஒழுங்கானவர்கள். விரைவாகக் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். ஓவியக்கலை இவர்களுக்கு ஒரு சுயமதிப்பை ஏற்படுத்து கிறது. இவர்களது படைப்புகள், இவர்களின் மனித, படைப்பாக்கப் பக்கத்தைக் காட்டு கிறது” என்று சுஷ்மா சொல்கிறார்.

இந்தக் கைதி ஓவியர்களால் அதிகம் தீட்டப்படுவது, புத்தர், காந்தி ஓவியங்கள் என்பது ஓர் சுவாரசியமான ஆச்சரியம்.

இச்சிறை ஓவியர்களில் ஒருவர், ரமேஷ் குமார். கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான கைதியான இவர், எதிர்காலத்தில் ஓவியம் மூலம் தனக்குத் தேவையான வருமானத்தை ஈட்டுவதே தனது எண்ணம் என்கிறார். காசியின் அழகான கட்டிடம் ஒன்றை இவர் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்.

“என்னை எப்போதும் வருத்திக்கொண்டிருக்கும் நினைவுகளில் இருந்து தப்பிக்க எனக்கு ஓவியம்தான் உதவுகிறது” என்கிறார் ரமேஷ்குமார். சிறையில் நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்ட இவர், விரைவில் தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வெளியே வந்துவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவரைப் போல இங்கே தூரிகை பிடித் திருக்கும் கைதிகள் பலருக்கும், ஏதோ ஓர் ஆறுதலை, நம்பிக்கையை கலை கொடுத்திருக்கிறது என்பது உண்மை. 

Next Story