இளமை இதோ.. இதோ..


இளமை இதோ.. இதோ..
x
தினத்தந்தி 1 Oct 2017 8:00 PM IST (Updated: 1 Oct 2017 3:55 PM IST)
t-max-icont-min-icon

இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உடலுக்கும், மனதுக்கும் ஒருசில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம்.

ளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உடலுக்கும், மனதுக்கும் ஒருசில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம். வயது அதிகமானாலும் ஆரோக்கியமான உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

* தினமும் சில நிமிடங்களையாவது தியானம் செய்வதற்கு ஒதுக்க வேண்டும். அது மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். அதன் மூலம் உடல் ரீதியான சில வியாதிகளை தவிர்க்கலாம். மேலும் தியானம் சுய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

* மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனை கட்டுப்படுத்து வதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். சில நிமிடங்களாவது தனிமையில் இருந்து அது தோன்றுவதற்கான காரணம் என்ன? என்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அதனை களைய முற்பட வேண்டும்.

* தினமும் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதயமாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறான எண்ணங்கள் தோன்றினாலும் அதனை மெதுவாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மனநிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

* உங்களை பற்றி நீங்களே மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் சில மாற்றங்களை நிகழ்த்தலாம். நண்பர்கள் அல்லது உங்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களுடன் அமைதியான இரவு பொழுதில் மனம் விட்டு பேசலாம். அது மனதை சாந்தப்படுத்தும்.

* கடினமான வேலைகளுக்கு பிறகு குளிர்ந்த நீரில் குளியல் போடலாம். ‘ஐஸ் குளியல்’ ரத்த ஓட்டத்தை மேம் படுத்த உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற துணைபுரியும். திசுக்களுக்கும் புத்துணர்ச்சி தரும்.

* சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைய செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை வடிகட்டும் குடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு உகந்த உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது. தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

* உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளை வழக்கமாக செய்து வருவது நல்லது. நடைப்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை தரும். தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களை சுரக்கும்.

* குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி நேரத்தை செலவிடுங்கள்.

* சவாசனம் என்ற யோகாசனத்தை செய்து வருவது நல்லது. அது நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்வை உருவாக்கும். மனதையும், உடலையும் சாந்தப்படுத்தும். குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது யோகாசனம் செய்வது நல்லது. தினமும் செய்து வருவது அதைவிட சிறப்பு. அது உடல் வலிமையையும், நெகிழ்வுத்தன்மையையும், மேம்படுத்தப்பட்ட மனநிலையையும் தோற்றுவிக்கும். சிறந்த வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

* மஞ்சள், இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். அது உடல் நலத்தை சுகாதாரமாக பேணுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம், வாதம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். புற்றுநோயை எதிர்த்து போராடும்.

* பச்சை நிற காய்கறிகளை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் வைட்டமின் கே அதிகமாக இருக்கிறது. இந்த வைட்டமின் குறைவாக இருந்தால் எலும்பு, இதயம், சிறுநீரகம் போன்றவை பலவீனமாகும். மேலும் பச்சை இலை காய்கறிகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் புற்று நோய் அபாயத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

* மிளகையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எடை குறைவுக்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். ஒற்றை தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* தினமும் காலையில் 15 நிமிடங்கள் உடல்பாகங்கள் சூரிய வெளிச்சத்தில் படுமாறு நிற்க வேண்டியது அவசியம். அதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெற்றுக்கொள்ளலாம். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள துணைபுரியும்.

* உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அவை சோர்வை ஏற்படுத்தி விடும்.

* அவ்வப்போது உடலை மசாஜ் செய்வதும் அவசியம். அது மன அழுத்தத்தை குறைக்கும். நரம்பு மண்டலம் சீராக இயங்க வழிவகை செய்யும். நிணநீர் முறையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

* புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது மனதை அமைதிப்படுத்தும். சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

* வாரத்தில் மூன்று முதல் ஐந்து முறை முகத்துக்கு மசாஜ் செய்து வருவது நல்லது. அவை முக தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். எப்போதும் புன்னகையுடன் வலம் வருவதும் முகத்திற்கு பிரகாசம் சேர்க்கும். 

Next Story