உலகப்போட்டிக்கு தயாராகும் டாக்டர்!


உலகப்போட்டிக்கு தயாராகும் டாக்டர்!
x
தினத்தந்தி 1 Oct 2017 8:30 PM IST (Updated: 1 Oct 2017 4:02 PM IST)
t-max-icont-min-icon

பல் மருத்துவ நிபுணர், தொழிற்பயிற்சி ஆலோசகர், சாகசங்களில் ஆர்வ மிக்கவர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட பன்முக பெண்மணி.

ல் மருத்துவ நிபுணர், தொழிற்பயிற்சி ஆலோசகர், சாகசங்களில் ஆர்வ மிக்கவர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட பன்முக பெண்மணி. ஆனாலும் இவருக்கு சக்கர நாற்காலிதான் உலகம். 21 வயதில் நடந்த சாலை விபத்தில் முதுகு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகி கடும் துயரங்களை அனுபவித்தார். அதிலிருந்து மீள பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. சக்கர நாற்காலிதான் அவருக்கு துணையானது. அதனை கண்டு அவர் துவண்டு விடவில்லை. சக்கர நாற்காலியில் சுழன்றபடியே பல் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார். அத்துடன் உளவியல், ஆடை வடிவமைப்பு, யோகா போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

ராஜலட்சுமிக்கு ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி பேஷன் உலகம் மீதும் மோகம் அதிகம். அதற்கு அழகும் துணை நிற்க, சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே பேஷன் ஷோக்களில் மாடலாக உலா வந்தார். இருந்தபோதிலும் மருத்துவ துறையின் மீதான நாட்டம் குறையாமல் பார்த்துக்கொண்டார். சிரமங்களுக்கு மத்தியில் பல் மருத்துவத்தில் முதுகலைப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதில் தங்கப்பதக்கம் வென்றும் ஆச்சரியப்படுத்தினார். ஆனாலும் பல் மருத்துவருக்கான அங்கீகாரம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. தங்கப்பதக்கம் வென்று பல் மருத்துவரான பூரிப்பில் பல தனியார் பல் மருத்துவமனைகளுக்கு வேலை தேடிச் சென்றார். சக்கர நாற்காலிதான் அவருடைய வாழ்க்கை என்றானதால் ஏமாற்றமே மிஞ்சியது. மனதை திடப்படுத்திக்கொண்டு சொந்தமாக மருத்துவ கிளினிக் ஒன்றை ஆரம்பித் திருக்கிறார்.

ஆரம்பத்தில் கிளினிக்கு வந்தவர்கள், ராஜலட்சுமி சக்கர நாற்காலியில் அறைக்குள் நுழைந்ததை பார்த்து அவரையும் நோயாளியாகவே கருதி இருக்கிறார்கள். அத்துடன் அவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கும் தயங்கி இருக்கிறார்கள். பின்னர் அவரது திறமையை அறிந்த பின்பு ராஜலட்சுமி பிரபலமான மருத்துவராகி விட்டார். தற்போது கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணி புரிகிறார். 2014-ம் ஆண்டு, சக்கர நாற்காலியில் போராட்ட வாழ்க்கை நடத்து பவர்களுக்காக நடந்த அழகி போட்டியில் பங்கேற்று ‘மிஸ் வீல் சேர் இந்தியா’ என்ற பட்டத்தையும் பெற்று விட்டார்.

“சக்கர நாற்காலியில் அமர்ந்து மிஸ் இந்தியா பட்டம் வெல்வது வெறும் அழகு சார்ந்த விஷயமல்ல. உடல் தோற்றத்தில் நாங்கள் பலவீன மானவர்களாக தோன்றலாம். மன தளவில் நாங்கள் மிக பலமானவர்கள். என்னைப் போன்றவர்கள் இயலாமை என்ற உணர்வில் இருந்து வெளி வர வேண்டும். அதுவே சாதிக்க துணையாக அமையும்” என்கிறார்.

தன்னைப் போன்று பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கக்கூடாது, அவர்களின் தனித்திறமைகள் வெளிப்பட வேண்டும் என்பது ராஜலட்சுமியின் நோக்கமாக இருக்கிறது. அதற்காக அறக்கட்டளை ஒன்றை நிர்வகித்தும் அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கூடைப்பந்து மற்றும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தி இருக்கிறார். வீட்டு உள் அலங்கார வடிவமைப்பு, பாடல், நடனம், ஓவியம் மற்றும் நீச்சல் ஆகியவற்றையும் கற்றறிந்து இருக்கிறார். சக்கர நாற்காலிதான் தன்னுடைய உலகம் என்றாலும் ராஜலட்சுமி வீட்டுக்குள் முடங்கி கிடப்பதில்லை. பெங்களூருவை சேர்ந்த இவர் 11 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்டுவதும் பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது. இவருக்கு ஏற்றபடி அந்த வாகனம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

“என் கைகளால் வாகனத்தை ஓட்டுவதை சவாலாக நினைக்கிறேன். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைப் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன்” என்று மனம் பூரிக்கும் ராஜலட்சுமி, போலந்து நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் ‘மிஸ் வீல்சேர் வேல்ர்டு’ போட்டிக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். 

Next Story