மொகரம் பண்டிகை: உடலில் பிளேடால் கீறி முஸ்லிம்கள் வழிபாடு


மொகரம் பண்டிகை: உடலில் பிளேடால் கீறி முஸ்லிம்கள் வழிபாடு
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

மொகரம் பண்டிகையையொட்டி காரைக்குடியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் உடலில் பிளேடால் கீறி வழிபாடு நடத்தினர்.

காரைக்குடி,

காரைக்குடி ஐந்து விளக்கு அருகே நியூடவுனில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் உலகம் முழுவதும் மொகரம் பண்டிகையை கடைபிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு மொகரம் மாதத்தின் முதல் தேதியில் இருந்து 10–ந்தேதி வரை இமாம் உசேன் மறைவினை நினைவுகூரும் வகையில் எழுப்பப்பட்ட சிறப்பு தொழுகை கூடத்தில் பஞ்சதத்தன் என்ற கொடி மரத்தினை வைத்து துக்கத்தை தெரிவித்தும், கறுப்பு கொடியினை ஏற்றியும், முஸ்லிம்கள் கறுப்பு ஆடையணிந்தும் விரதம் கடைபிடித்தனர். அப்போது குறிப்பிட்ட உணவை மட்டும் அவர்கள் உண்டுவந்தனர்.

இந்தநிலையில் மொகரத்தின் 10–வது நாளான நேற்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதனையொட்டி சிறப்பு படையல் போடப்பட்டது. பின்னர் துக்க பாடல்களை பாடியபடி ஆண்களும், பெண்களும், சிறுவர்–சிறுமிகளும் சாம்பிராணி புகைமூட்டத்தோடு பஞ்சதத்தன் என்ற கொடிமரத்தை ஏந்தியபடி தொழுகை கூடத்தை வலம் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஏராளமான முஸ்லிம்கள் தங்களது உடலில் பிளேடால் கீறியபடியும், கைகளால் நெஞ்சில் அடித்தபடியும், ரத்தம் சொட்ட தொழுகை கூடத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினர். அப்போது பெண்கள், சிறிய குழந்தைகளை பஞ்சதத்தன் என்ற கொடிமரத்தை தூக்கி வருவோர் முன்பு படுக்க வைத்தனர். பின்னர் கொடி மரத்தை தூக்கி வந்தவர் குழந்தைகளை தாண்டி சென்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும் என்று ஷியா பிரிவு முஸ்லிம்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story