கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் இது வரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தவிர மேலும் பலர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரும் நிலவேம்பு குடிநீரை பருகினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் எடுத்து வருகின்றனர்.
நிலவேம்பு குடிநீரை பொதுமக்கள் குடித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். இதற்கு மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். அதிகாரிகள் மட்டும் செயல்பட்டால் போதாது. அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்.
ஆகவே மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியில் 600 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 39 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
மாவட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாதவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான், நகர்நல அலுவலர் எழில்மதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகரசபை முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. (அம்மா) அணி நகர செயலாளருமான குமரன், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், நகர துணை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, சேகர், ஆர்.வி.மணி, சுகந்தி ராஜூ, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடலூர் புதுப்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்துறை சிறப்பு மருத்துவ சேவையை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ சேவை தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். சிறப்பு மருத்துவர்கள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.