திண்டுக்கல், வேடசந்தூரில் மர்ம காய்ச்சலுக்கு, சிறுவன் உள்பட 2 பேர் சாவு


திண்டுக்கல், வேடசந்தூரில் மர்ம காய்ச்சலுக்கு, சிறுவன் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், வேடசந்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மறவபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சக்திவேல் (வயது 22). இவர், கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

ஆனால், காய்ச்சல் குணமாகாததால், நேற்று முன்தினம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு வீடு திரும்பிய சக்திவேல் மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இறந்தார். மேலும் கிராமத்தில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வேடசந்தூர் அருகே உள்ள புதுஅழகாபுரியில் அஞ்சனாஸ்ரீ (3) என்ற பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு இறந்தது. அதேபோல் கடந்த 22–ந்தேதி சின்னராவுத்தன்பட்டியில் ஹஸ்வந்த் (4) என்ற சிறுவனும், அழகாபுரியில் பரணி (11) என்ற 6–ம் வகுப்பு மாணவியும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 29–ந்தேதி தொட்டணம்பட்டியில் தனுஸ்ரீ (5) என்ற சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திண்டுக்கல் அருகேயுள்ள வாழக்காய்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி மகன் சக்திவேலுக்கு (3), கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அதேபோல் ம.மு.கோவிலூர் ஊராட்சியில் பாப்பாத்தி (38), ராபின்கென்னடி (18) ஆகியோர் ஏற்கனவே காய்ச்சலால் இறந்துள்ளனர்.

மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story