கேரள வனப்பகுதி வனவிலங்குகளின் தேவைக்காக சின்னக்கல்லார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
வால்பாறை சின்னக்கல்லார் அணையிலிருந்து கேரள வனப்பகுதி வனவிலங்கு தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அணைகளாக விளங்கும் சோலையார்அணையிலிருந்து தமிழக கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழைக்காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கேரளாவில் உள்ள கேரள சோலையார் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அதே போல மற்றொரு தமிழக–கேரள நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி சின்னக்கல்லார் அணையிலிருந்து அக்டோபர் மாதம் 1–ம் தேதி முதல் ஜனவரி மாதம் 31–ம் தேதி வரை சின்னக்கல்லார் அணைக்குவரக்கூடிய தண்ணீர் முழுவதையும் கேரளாவில் உள்ள வனப்பகுதி செழிப்பிற்காகவும், வனவிலங்குகளின் தேவைக்காகவும் ஆண்டுதோறும் திறந்துவிடப்பட்டு வருகிறது.
அதன்படி செயற்பொறியாளர் லோகநாதன், உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று காலை 8 மணிக்கு சின்னக்கல்லார் அணையின் அடிமட்ட மதகை திறந்து விட்டனர். நேற்று காலை சின்னக்கல்லார் அணைக்கு வினாடிக்கு 248.38 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருந்தது.சின்னக்கல்லார் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காலை 9 மணி முதல் நீரார் அணை வழியாக கேரளாவிற்கு சென்றது.