சிறுமியை தாக்கி பாட்டியை கொன்று பணம் திருடி சென்ற 2 வாலிபர்கள் கைது


சிறுமியை தாக்கி பாட்டியை கொன்று பணம் திருடி சென்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 Oct 2017 4:45 AM IST (Updated: 2 Oct 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் சிறுமியை தாக்கி பாட்டியை கொலை செய்து வெள்ளி பொருட்கள், பணத்தை திருடிச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கம்,

செங்கத்தை அடுத்த பக்கிப்பாளையம் காயம்பட்டு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜிதா (வயது 52). இவர் தனது பேத்தி ரிஸ்வானாவுடன் (8) கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பாட்டி, பேத்தியை சரமாரியாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், பணத்தை திருடி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஷாஜிதா, ரிஸ்வானா ஆகியோர் சிகிச்சைக்காக, செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து, செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே, ஷாஜிதா சிகிச்சை பலனின்றி ஆகஸ்டு 22-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, பழனி ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சின்ராஜ், கர்ணன், பூபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், நசுரூதீன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ஷாஜிதா வீட்டின் அருகே வசிக்கும் முருகன் என்பவரின் மகன் சுதாகர் (27), கண்ணன் என்பவரின் மகன் பழனி (28) ஆகிய 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் ஹாஜிதாவை கொலை செய்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், ஷாஜிதா வீட்டின் அருகே பழனி வசித்து வந்துள்ளார். பழனி அடிக்கடி ஷாஜிதாவிடம் செலவுக்கு கடனாக பணம் வாங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு பழனி அவருடைய நண்பர் சுதாகர் இருவரும் ஷாஜிதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் அவரை கட்டையால் தாக்கி உள்ளனர். மேலும் ரிஸ்வானாவையும் தாக்கினர். இதில் இருந்து தப்பிக்க போலீசாரை திசை திருப்ப வெள்ளி பொருட்கள், பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 

Related Tags :
Next Story