முத்தியால்பேட்டை, சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்


முத்தியால்பேட்டை, சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2017 3:55 AM IST (Updated: 2 Oct 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அப்போது மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீதும் மற்றும் கவர்னர் அலுவலகத்திற்கு இ–மெயில்கள் மூலம் வரும் புகார்கள் மீதும் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இந்தநிலையில் முத்தியால்பேட்டை வி.ஓ.சி. தெருவில் உள்ள பூங்கா நகராட்சியால் சரியாக பராமரிக்காததால் சேதமடைந்து இருப்பதாகவும், இதனால் அந்த பூங்கா தற்போது சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். மேலும் பூங்காவை சீர்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையொட்டி கவர்னர் கிரண்பெடி முத்தியால்பேட்டை வி.ஓ.சி. நகரில் நேற்று காலை ஆய்வுப்பணி மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பூங்காவை சுற்றிப்பார்த்த கவர்னர் கிரண்பெடி அங்கு மரக்கன்றுகள் நட்டார்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சிறுவர்களை அழைத்து அவர்களிடம் மரங்கன்றுகளை நடும்படி கூறினார். பின்னர் அவர்களிடம் நீங்கள் தான் இந்த மரக்கன்றுகளின் உரிமையாளர்கள், எனவே இந்த மரங்கன்றுகளை பராமரித்து வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பூங்காவிற்குள் இருக்கும் கட்டிடத்தை சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. சுய உதவிக்குழுவினர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அந்த கட்டிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் அந்த பூங்காவில் சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கமாறு நகராட்சி ஆணையர் கணேசனுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

மேலும் இந்த பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காவல்துறையின் அவசரகால எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதுபோல் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து போலீசார், அவசர கால எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த கொலுவை பார்வையிட்டார். பின்னர் சோலைநகர் பூங்காவிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பூங்காவில் கோபுர மின்விளக்கு பழுதடைந்து இருப்பது தெரியவந்தது. அதை சரிசெய்யும் படியும், கோபுர மின் விளக்கில் உள்ள சோடியம் பல்புகளை மாற்றி விட்டு எல்.இ.டி. பல்புகளை பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அவர் சென்றார்.


Next Story