வல்லக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கலெக்டர் உறுதி


வல்லக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

வல்லக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உறுதி அளித்தார்.

வாலாஜாபாத்,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 634 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றார்.

பின்னர் கிராம வளர்ச்சி மற்றும் தூய்மை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:–

தனிநபர் கழிப்பிடம் குறித்து மக்கள் உணர்ந்து செயல்பட்டு வரும் காலங்களில் தூய்மையான, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். வல்லக்கோட்டை கிராமத்தில் அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கிராம முழுமைக்கும் செய்து தரப்படும்.

இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல், சுற்றுப்புறத்தை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மகளிர் குழுவினர், சமையல் பயிற்சி பெற்று உள்ளதால் அதன் மூலம் வருவாயை பெருக்க தங்களுக்கு சமையல் கூடம் கட்டித்தரவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அவர், உடனடியாக சமையல் கூடம் கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதாரணி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கையற்செல்வி, லீமாரோஸ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. பற்றாளர் பிரிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், கண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி நடுவே புதியதாக திறக்கப்பட்டு உள்ள மதுக்கடையை உடனே மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்ககோரி ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பற்றாளர் பிரிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரிடம் இது தொடர்பான கோரிக்கை மனுவை பொதுமக்கள வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட பற்றாளர் பிரிதா, இதை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஊராட்சி செயலர் தினேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவருடன் இணைந்து கூட்டத்தை நடத்தினார்.

கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள், ஊராட்சியில் இயங்கும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாயமும் பாதிக்கப்படுவதால் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலமுறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஊராட்சி செயலர் மற்றும் அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் கூறினர்.

அப்போது ஒரு சிலர், ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணறு, ஏரி, குளங்களில் உள்ள நீரை ஆய்வுசெய்ய வேண்டும். குடிநீர் கிணறு அருகே உள்ள குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக கட்டப்பட்ட தடுப்பணையை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். அதை சீரமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் பொதுமக்களில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி, அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story