ஆந்திராவில் இருந்து ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் இருந்து சொகுசு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

செங்குன்றம்,

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், சண்முகம் மற்றும் போலீசார் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் பகுதிக்கு வந்த ஒரு காரை போலீசார் நிறுத்துமாறு கூறினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் காரை விரட்டி பிடித்தனர். காரில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் காரை சோதனை செய்த போது அதில் 14 செம்மரக்கட்டைகள் இருந்தது. இதையடுத்து காரையும், செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங் கல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 26), திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி வட்டம் வடபாலை கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் குமார் (34) என தெரியவந்தது.

இதை தொடர்ந்து கணேசன், குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story