திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:00 AM IST (Updated: 3 Oct 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்று போந்தவாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துயர் துடைப்பு தாசில்தார் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு ஆஸ்பத்திரிகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டெங்கு கொசுக்களை ஒழிக்க மாவட்டத்தில் 1,110 கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து உள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து அனைத்து ஊராட்களிலும் டெங்கு ஒழிப்புக்காக குறும்படம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 4–ந் தேதி(நாளை) முதல் புதன்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும். அன்று நாள் முழுவதும் அரசு அலுவலகங்களில் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ள பழைய டயர், உடைந்த மண் ஓடுகள் ஏதாவது இருந்தால் அவைகள் அகற்றப்படும்.

பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு துணியால் செய்த பைகளை பயன்படுத்தினால் சுகாதாரம் நிறைந்த சூழ்நிலையை உண்டாக்கலாம்.

அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு காலை, மாலையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். நில வேம்பு கசாயம் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பொது இடங்களில் மலம் கழிப்பதை அறவே ஒழிக்க அரசு தனிநபர் கழிப்பறை கட்ட முழு மானியத்துடன் கூடிய திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பிரதாப், வெங்கடரமணா, நேரு, முன்னாள் துணைத்தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story