நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது பரிதாபம்: அருவியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் சாவு
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெங்களூரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அருவியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
குடகு,
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் காவேரியப்பா. இவரது மகன் தர்ஷன்(வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்ஷன், தனது கல்லூரி நண்பர்கள் 4 பேருடன் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு பகுதியில் உள்ள சேலவரா அருவிக்கு சுற்றுலா சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷன் கால் தவறி அருவியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் நாபொக்லு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தர்ஷனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இரவு வெகு நேரமானதால் அவரது உடலை தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மீண்டும் உடலை தேடும்பணி தொடங்கியது. அப்போது அவரது உடல் மீட்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாபொக்லு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.