சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு
ஹாவேரி அருகே டயர் வெடித்து சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. கோவிலில் சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா ஹலகேரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மரக்கட்டைகளை ஏற்றி டயர் வெடித்த நிலையில் நின்ற லாரி மீது மோதியது. இதில், காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியில் இருந்த மரக்கட்டைகள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு காருக்குள் சொருகியது.
இதனால், காரில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் ஹலகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரில் இருந்த பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி இறந்ததும், டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராணிபென்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மாகனூர் கிராமத்தை சேர்ந்த பூர்ணிமா(வயது 25), நாகம்மா(42), சர்வக்கா(52), கங்கம்மா பசராஜ்(55), கோட்யாலா கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(25) சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா கிராமத்தை சேர்ந்த கவுரம்மா(40) ஆகியோர் இறந்தது தெரியவந்தது. மேலும், மாகனூரை சேர்ந்த மஞ்சுநாத் பண்டாரி(32), பரமசாகரை சேர்ந்த குருசித்தப்பா(45), திப்பக்கா(45), சன்னபசப்பா(45), டிரைவர் ரமேஷ்(35) ஆகியோர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.
இவர்கள் மஞ்சுநாத் பண்டாரி–பூர்ணிமா தம்பதியின் 3 வயது மகன் பிறந்தநாளை நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் சிக்கந்தூரில் உள்ள ஒரு கோவிலில் கொண்டாடியதும், கோவிலில் இருந்து மீண்டும் மாகனூர் கிராமத்துக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. இதுகுறித்து, ஹலகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ராணிபென்னூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.