தெருநாய்கள் துரத்தியதால் ஓடிய 7–ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து சாவு


தெருநாய்கள் துரத்தியதால் ஓடிய 7–ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 4 Oct 2017 3:45 AM IST (Updated: 4 Oct 2017 3:49 AM IST)
t-max-icont-min-icon

பீதரில் தெருநாய்கள் துரத்தியதால் ஓடிய 7–ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

பெங்களூரு,

பீதர் டவுன் பெத்தலகேம் காலனியை சேர்ந்தவன் வின்சென்ட் ராஜ்(வயது 13). இவன் அதேப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் அங்குள்ள ஒரு டியூசன் மையத்தில் படித்து வந்தான். நேற்று முன்தினம் டியூசன் முடிந்த பின்பு வின்சென்ட் ராஜ் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்போது சாலையில் நின்ற தெருநாய்கள் அவனை பார்த்து குரைத்தன. மேலும், அவனை தெருநாய்கள் கடிக்க முயன்றன. இதனால் பயந்துபோன வின்சென்ட் ராஜ் தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினான். அவனை தெருநாய்கள் துரத்தி சென்றன.

அப்போது, அவன் அந்த பகுதியில் சுற்றுசுவர் இல்லாத நிலையில் பாழடைந்து உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தான். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த வின்சென்ட் ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான். இதனால், அவன் அலறி துடித்தான்.

அவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்தபகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி வின்சென்ட் ராஜை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி வின்சென்ட் ராஜ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெருநாய்கள் துரத்தியதால் பயந்து ஓடிய பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகரில் தெருநாய்கள் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story