நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்


நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 309 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் உள்ளனர்.

நெல்லை,

வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 309 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12 லட்சத்து 38 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 12 லட்சத்து 77 ஆயிரத்து 579 பேரும், இதர வாக்காளர்கள் 79 பேரும் இடம்பெற்று உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை தொடர் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் இரட்டை பதிவுகள் மற்றும் இறப்பு ஆகியவற்றால் 7 ஆயிரத்து 817 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக 19 ஆயிரத்து 242 வாக்காளர்களின் பெயர் கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 7-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும்.

அதேபோன்று நகர பகுதிகளில் மேற்படி இரு தினங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.


Related Tags :
Next Story