இளம்பெண் கொலை வழக்கில் மானாமதுரை வக்கீல் உள்பட 2 பேர் கைது


இளம்பெண் கொலை வழக்கில் மானாமதுரை வக்கீல் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2017 3:45 AM IST (Updated: 4 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அவனியாபுரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மானாமதுரை வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவனியாபுரம்,

அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணி ரிங் ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதர் பகுதியில் மானாமதுரையை அடுத்த ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த வனிதா (வயது 28) என்ற பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வனிதாவும் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் தேவா என்ற சாக்ரடீஸ் தேவா(34) என்பவரும் காதலித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை பெண் கேட்டு சென்ற போது, வனிதாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆவாரங்காடு பகுதிக்கு சென்று அங்கு மறைந்திருந்த சாக்ரடீஸ் தேவாவையும், அவரது நண்பர் சின்னத்தம்பி ராவுத்தரையும் (24) பிடித்து மதுரைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், சம்பவத்தன்று சாக்ரடீஸ் தேவா, வனிதாவையும், சின்னத்தம்பி ராவுத்தரையும் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார். மதுரை விரகனூர் அணை பகுதியில் சாக்ரடீஸ் தேவா நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சிலைமான் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எனவே சின்னத்தம்பி ராவுத்தரிடம், வனிதாவை ரிங்ரோடு பகுதியில் இறக்கி விடுமாறு கூறி விட்டு, சாக்ரடீஸ் தேவா அங்கேயே இறங்கி கொண்டார். அவரும் மோட்டார் சைக்கிளில் அவனியாபுரம் அருகே வந்த போது போதையில் வனிதாவிடம் சில்மிஷம் செய்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

எனவே வனிதா தலையில் கல்லைப் போட்டு சின்னத்தம்பி கொலை செய்து விட்டு, ஒரு புதரில் உடலை வீசி விட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சாக்ரடீஸ் தேவா மற்றும் சின்னத்தம்பி ராவுத்தர் ஆகியோரை அவனியாபுரம் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 

Related Tags :
Next Story