மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இது வரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்று டீன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் மருத்துவமனைகளில் ஏராளமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை பெரிய ஆஸ்பத்திரியிலும் டெங்கு பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் (பொறுப்பு) கூறியதாவது:–
மதுரை மாவட்டத்தில் பெரிய ஆஸ்பத்திரி, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் 30 படுக்கை வசதி கொண்ட கிராம சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான மருந்து, மாத்திரைகள் கூடுதலாக இருப்பில் உள்ளன. தொடர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறோம். சாதாரண காய்ச்சலுக்கு டாக்டர்கள் ஆலோசனைப்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடுதல் வார்டுகள் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகத்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட உயிரிழக்க வில்லை. அனைவரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார், இணை இயக்குனர் ருக்மணி ஆகியோர் கூறுகையில், “மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். எந்த நேரமும் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கொசு ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.