ரூ.10 கோடி செலவில் ஊட்டி– கோத்தகிரி சாலை அகலப்படுத்தும் பணி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை


ரூ.10 கோடி செலவில் ஊட்டி– கோத்தகிரி சாலை அகலப்படுத்தும் பணி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2017 3:45 AM IST (Updated: 5 Oct 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி–கோத்தகிரி சாலை ரூ.10 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால், இங்குள்ள சாலைகள் அனைத்தும் ஏற்ற, இறக்கங்களாகவே காணப்படுகின்றன. தற்போது ஊட்டியில் 2–வது சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதி, ஊட்டி–குன்னூர் சாலை, ஊட்டி–கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிகவும் தாமதமாக செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி விட்டு, இயற்கை அழகை ரசிக்கின்றனர். அந்த சமயங்களில் பின்னால் வரக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வெகு நேரங்களுக்கு பின்னரே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

கோவையில் இருந்து கோத்தகிரி, ஊட்டி வழியாக கூடலூர் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கோவையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டி–கோத்தகிரி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக உலக வங்கி நிதிக்குழு மூலம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பேரார் வரை சாலை அகலப்படுத்துவதுடன், சாலையோரம் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்படுகிறது. ஊட்டி–கோத்தகிரி சாலையில் 3 இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஊட்டி– கோத்தகிரி சாலை தொட்டபெட்டா அருகே உள்ள ஒரு பாலத்தை ரூ.22 லட்சம் செலவில் அகலப்படுத்தும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, மழைநீர் செல்லும் வகையில் பெரிய பாலம் அமைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குழந்தைசாமி தலைமையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.


Next Story