புஞ்சைபுளியம்பட்டியில் தூக்குப்போட்டு பாதிரியார் தற்கொலை


புஞ்சைபுளியம்பட்டியில் தூக்குப்போட்டு பாதிரியார் தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2017 3:00 AM IST (Updated: 5 Oct 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் தூக்குப்போட்டு பாதிரியார் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய அறையில் இருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

புஞ்சைபுளியம்பட்டி,

கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் பெலிக்ஸ் ஆண்டனி (வயது 35). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். அங்கு புதிதாக தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்குள்ள பழைய தேவாலய கட்டிடத்தின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு நேற்று பெலிக்ஸ் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய அறையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தனிமை என்னை வாட்டுவதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பெலிக்ஸ் ஆண்டனியின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story