சூலூர் அருகே மதுக்கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பொதுமக்கள் வீடு திரும்பா போராட்டம்

சூலூர் அருகே மதுக்கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பொதுமக்கள் வீடுதிரும்பா போராட்டத்தை நடத்தினர். முன்னதாக மதுக்கடைக்கு ஆதரவாக போராடிய மேஸ்திரி உயிரிழந்தார்.
சூலூர்,
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள செங்கத்துறை பகுதியில் கடந்த வாரம் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் கோவில் இருப்பதால் பொதுமக்கள் இந்த மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் செங்கத்துறை பொதுமக்கள் நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அங்கு தாசில்தாரை சந்தித்து மதுக்கடையை அகற்றவேண்டும் என்று மனு அளித்தனர். அதேபோல் மற்றொரு தரப்பினர் மதுக்கடையை அந்த பகுதியில் இருந்து அகற்றக்கூடாது என்று கூறி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே தாசில்தார் பக்தவச்சலம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் இருதரப்பினரிடையே தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கத்துறை பஸ் நிறுத்தம் அருகே உள்ள மாகாளி அம்மன் கோவில் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு பந்தல் அமைத்து வீடு திரும்பா போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கடையை நிரந்தரமாக அகற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்றனர். மதுக்கடைக்கு எதிராக பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து இரவு 7 மணிக்கு கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சூலூர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று செங்கத்துறை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இறந்தார். இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். மேலும் ஆறுமுகம் மதுக்கடையை மூடக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.