திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க 42 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் தன்ராஜ் தலைமை தாங்கினார். இதையொட்டி நடந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகள் பயன்படுத்த அறிவுறுத்தி வீடு, வீடாக சென்று துணி பைகளை வழங்கினார். பின்னர் பேரூராட்சி ஊழியர்கள் சேமித்து வைத்த பழைய டயர்கள், டியூப்களை பார்வையிட்டார்.

அதைதொடர்ந்து ஊத்துக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சென்ற கலெக்டர் சுந்தரவல்லி, அங்கு உள் மற்றும் வெளி நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். டாக்டர்கள் மருந்து, மாத்திரைகளை ஒழுங்காக கொடுக்கின்றனரா?, தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 18 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். போலி டாக்டர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கண்காணிக்க 42 டாக்டர்களுடன் கூடிய பறக்கும் படை அமைத்து உள்ளோம். இந்த குழுவில் உள்ள டாக்டர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வருகிற 9–ந் தேதி முதல் 13–ந்தேதி வரை பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த காலத்தில் மின்னல் ஏற்படும் போது மக்கள் வெளிபுறங்களில் இருந்தால் உடனே அவர்கள் பாதுகாப்பான கட்டிடங்களில் போய் தங்கிவிட வேண்டும். கட்டிடங்கள் கிடைக்கவில்லை என்றால், தாழ்வான பகுதியில் தங்க வேண்டும். உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அது மின்னலை இழுப்பதால் பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான திறந்த வெளியில் செல்ல வேண்டும். இடி, மின்னல் ஏற்படும் போது வெளியில் செல்ல வேண்டாம்.

நெருப்பு, ரேடியேட்டர்கள், உலோக அடுப்புகள், குழாய்கள், தண்ணீர் நிரைந்த தொட்டி, தொலை பேசி ஆகிய மின் கடத்தி பொருட்களை விட்டு விலகி இருக்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது நீர் உள்ள இடங்களில், அதாவது படகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் தாக்கும் அறிகுறியை உடலில் உணறும் போது தலைமுடி செங்குத்தாக நின்றும், உடல் சிலிர்த்த நிலை ஏற்படும் போது உடனடியாக தரையில் படுத்துவிட வேண்டும்.

மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை வெளியே விடாமல் பொதுவாக மரங்களின் கீழ் நிற்க வைக்காமல் பாதுகாப்பான மின்னல் பாதிப்பின்றி அமைக்கபட்டு உள்ள கூடாரத்துக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம். பயன்பாட்டில் உள்ள கேபிள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மற்றும் மின்சார கம்பிகள் பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வேண்டும். பலத்த காற்று வீசும் போது செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story