வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்


வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி நிலையங்களில் உள்ள மின்இணைப்புகள் சரியாக உள்ளதா, கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள கால்வாய்களில் அடைப்பு இல்லாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கல்வி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் ஏதும் இருந்தால், அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசியமான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்து இருக்க வேண்டும். ஜெனரேட்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை கவனிப்பதுடன், ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்படாத வகையில் உயரமான இடத்தில் இருக்க வேண்டும்.

மழை காலங்களில் தொலைதொடர்பு இணைப்புகள் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்யும் வகையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் பணியாளர்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன் மற்றும் கல்வி நிலைய நிர்வாகிகள், ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story