திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Oct 2017 4:00 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 20-ந்தேதி(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் மாலை 4 மணி அளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

தங்க சப்பரத்தில்...

2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடன் மேள, வாத்தியங்களுடன் சுவாமி சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

25-ந் தேதி சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான 25-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

26-ந் தேதி திருக்கல்யாணம்

7-ம் திருநாளான 26-ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11.45 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

8-ம் திருநாளான 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9-ம் திருநாளான 28-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 11-ம் திருநாளான 30-ந் தேதி(திங்கட்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

31-ந் தேதி மஞ்சள் நீராட்டு

12-ம் திருநாளான 31-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி-அம்பாள் திருவீதி உலா சென்று கோவில் சேர்கிறார்கள். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Related Tags :
Next Story