எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:45 AM IST (Updated: 5 Oct 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்று எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கரூர்,

கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மைதானத்தில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கரூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 22 ஆயிரத்து 282 பயனாளிகளுக்கு ரூ.88 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கியும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இதுவரை 15 மாவட்டங்களில் நடந்து முடிந்து 16-வது விழாவாக கரூரில் நடந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூர் நகரம் சேரன் செங்குட்டுவன் தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த வஞ்சி மாநகரம் என்ற பெருமைக்குரியது. மறைந்த எம்.ஜி.ஆர். 1984-ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் உள்ள புகழூரில் காகித ஆலையை தொடங்கி வைத்தார்.

இந்த காகித ஆலை ஆசிய அளவில் காகித உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது 2013-ம் ஆண்டு இதே காகித ஆலை வளாகத்தில் ரூ.100 கோடியில் சிமெண்டு உற்பத்தி செய்யும் பிரிவை தொடங்கி வைத்தார். போர்வை மற்றும் கொசுவலை உற்பத்திக்கு பெயர் பெற்ற கரூர் பஸ்பாடி கட்டும் பணியிலும் சிறந்து விளங்குகிறது. அரவக்குறிச்சியில் விளையும் முருங்கைக்காய் உலகில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

எம்.ஜி.ஆரின் சொல்லும், செயலும் ஒன்றாகவே இருந்தது. அதனால் தான் திரைப் படத்துறையில் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி.ஆரை மக்கள் இருகரம் கூப்பி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். தனது ஆளுமைத்திறனால் அரசியலில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். எதிரிகளையும் கனிய வைத்த சாமர்த்தியம் எம்.ஜி.ஆருக்கு உண்டு. எம்.ஜி.ஆரிடம் அரசியல் பாடம் கற்ற ஜெயலலிதா அவரது வழியில் ஆட்சி செய்த போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் எளிதாக தீர்த்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதாவின் 6 ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் எவ்வளவோ இருக்கின்றன.

இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள் என எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது எனது கடமையாகும். கரூர் மாவட்டத்தில் மட்டும் எத்தனையோ வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதனை தனிப்பட்டியலாக நான் அறிவிப்பேன். குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு அந்த வண்டல் மண்ணால் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பணியே மகேசன் பணி என்று நினைக்கிறோம். மக்கள் பலம் ஒன்றே எங்களுக்கு போதும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் என்ன செய்தீர்கள் என விமர்சனம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு இதனையே எனது பதிலாக அளிக்கிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை மாநிலம் முழுவதும் நிறைவடைந்த ரூ.8 ஆயிரத்து 435 கோடியே 68 லட்சம் மதிப்பிலான 34 ஆயிரத்து 70 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் ரூ.3 ஆயிரத்து 482 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரத்து 716 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். ஆக மொத்தம் ரூ.11 ஆயிரத்து 917 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டிலான 40 ஆயிரத்து 786 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு நல்லது செய்வதற்கு நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. நாங்கள் மக்கள் சேவையை மகேசன் சேவையாக கருதி மக்கள் தொண்டு ஆற்றுவதில் ஒருகாலமும் பின்வாங்க மாட்டோம். சிலர் தவறானவர்களை பிடித்து கொண்டு தவறான திசைக்கு போய் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நாங்கள் காப்பாற்றி தாய் வீட்டிற்கு கொண்டு வருவோம்.

இதை கூறுகிற போது எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இக்கரையில் 2 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். எப்படி அக்கரைக்கு போவது என்று யோசிக்கும் நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அப்படியே ஆற்றில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தது. இதைப்பார்த்த 2 பேரில் ஒருவன் ஆற்றில் குதித்து அந்த காளை மாட்டின் வாலை கெட்டியாக பிடித்து கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை அக்கரையில் சேர்த்து விட்டது. அடுத்தவன் நமக்கும் ஒரு வால் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தான். இந்த நேரம் ஒரு ஆடு வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் குதித்து அந்த ஆட்டின் வாலை பிடித்து கொண்டான். இந்த மனிதனை பிடித்து கொண்டு அந்த ஆட்டால் ஆற்றில் நீந்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆடும் அந்த மனிதனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள். அவர்கள் போக நினைத்த இடம் வேறு. போய்க்கொண்டிருக்கிற திசை வேறு. இப்படித்தான் சிலர் ஆட்டின் வாலைப்பிடித்து கொண்டு கரைசேர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ஊரைச்சேர்ந்த ஒருவர் (செந்தில்பாலாஜி) செய்த துரோகம் பற்றி பேசினார். இந்த இயக்கத்திற்கு அவர் துரோகம் செய்து விட்டார் என்பது உண்மைதான். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது அவரது துரோகத்துக்கு நாங்களும் துணை போய் விட்டோம்.

அப்போது ஜெயலலிதா கட்டளையிட்டதால் தளபதியின் கட்டளையை ஏற்று செயல்படும் சிப்பாய் போல பணியாற்றி அவரை வெற்றி பெற செய்தோம். அதன்பலனாக தான் அவர் வெற்றி பெற்றார். அவர் எப்படிப்பட்டவர் என்பது இப்போது தான் எங்களுக்கு புரிந்திருக்கிறது. அவரது துரோகத்தை வரலாறு எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும். கரூர் மக்கள் அவரை ஒரு கரும்புள்ளியாகத்தான் நினைக்கிறார்கள்.

அ.தி.மு.க. என்பது உணர்வு பூர்வமான தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்கு செந்தில்பாலாஜி அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார். செந்தில்பாலாஜியுடன் எத்தனை பேர் சேர்ந்தாலும் கவலை இல்லை. இயக்கத்தொண்டர்களும், மக்களும் நம்மோடு இருக்கும் வரை இந்த ஆட்சியை அசைக்கவோ, அழிக்கவோ, கவிழ்க்கவோ முடியாது. எங்களது அனுபவம் தான் அவரது வயதாக இருக்கும்.

எனவே அவர் காட்டும் சலசலப்புக்கோ, சூழ்ச்சிக்கோ நாங்கள் அஞ்சமாட்டோம். செந்தில்பாலாஜியை பற்றி இந்த விழா மேடையில் பேச வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரைப்பற்றி பேசிவிட்டேன்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஒரு பெரிய பட்டியலையே படித்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி தருவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். முடிவில் கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story